TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை!

Advertisements

தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 8 ஆம் தேதி, கடலோர  தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

9 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

வரும் 10 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி,  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலைபற்றிய  முன்னறிவிப்பு:

06.04.2024 முதல் 10.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று  தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி, அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி, அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாகத் தமிழகத்தில்  2° – 3° செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக  இருக்கக்கூடும்.

வெப்ப அலைபற்றிய முன்னெச்சக்கரிகை:

ஏப்ரல் 9 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதி, வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.2° செல்சியஸ், சேலத்தியில் 41.26° செல்சியஸ், தருமபுரியில்  41.0° செல்சியஸ், மதுரை நகரம் மற்றும்  விமான நிலையம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர்   40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர், திருத்தணி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.  கடலோரப் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° – 30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 35.8°  செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *