
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி சி க 2, சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2 ,சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ,பாதாள சாக்கடை ,குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை.
அதுமட்டுமல்லாமல், திமுக கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைப்பட்சமான நிர்வாகத்தைக் கண்டித்தும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால்வரையில் எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தரத் திமுகவும் மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் குற்றம் சுமத்துகிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகள்:
1.பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.25.50 லட்சம் என ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரே வாரத்தில் அதை மற்றொருவருக்கு மாற்றி 25.60 லட்சம் ரூபாயென அனுமதி வழங்கப்பட்டிருப்பதை காணும்போது, யாரோ தனிநபர் ஒருவர் லாபம் சம்பாதிக்க மாநகராட்சி துணை செல்வதாகத் தெரிகிறது.
2. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி.எழிலரசன் தலையீட்டின் பெயரில், அன்னை அஞ்சுகம் கட்டிடத்தைப் பழுது பார்ப்பதற்காகத் தகுதியே இல்லாத ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
3. காஞ்சிபுரம் மாநகராட்சியில் போதுமான பணியாளர்களையும் , போதுமான வாகனங்களையும் நியமிக்கத் தவறியதால் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
4. கட்டிட அனுமதி பெற லஞ்சம் பெரும் அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர்.
5.மாநகராட்சி பொறியாளர் கணேசன் பெருமளவில் முறைகேடு செய்து வருகின்றார்.
6. எதிர்க்கட்சி வார்டுகளுக்கு மட்டும் இதுவரையிலும் டெண்டர் விடாமல் காலம் தாமதம் செய்யப்படுகிறது.
7.பணி மாறுதலில் செல்லும் அதிகாரிகளுக்கு மாற்றாகப் புதிய அதிகாரிகள் நியமிக்காததால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை
8. தகுதியற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதால் செய்கின்ற பணிகளும் தரமற்ற முறையில் உள்ளது.
மேற்கண்ட குற்றசாட்டுகளை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகராட்சி பரபரப்பாகக் காணப்படுகின்றது.

