
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையத்தில், ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் எனச் சுமார் 10,000 மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நெய்வேலி அருகே உள்ள கத்தாழை கிராமத்திற்கு உட்பட்ட மும்மூடிசோழகன் பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் என்பவர், நெய்வேலி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். அவர் தற்காலிகமாகப் பணிபுரிந்து வந்த ஊழியரான ராமச்சந்திரன்,
இன்று வழக்கம்போல் காலைப் பணிக்குச் சென்று, இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள, பாய்லர் செக்ஷனில் எலக்ட்ரிக்கல் கேபிள் இழுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார்.
அப்பொழுது எலக்ட்ரிக்கல் கேபிள் ஒயரை இழுக்க முற்பட்டபோது, நிலை தடுமாறி, சுமார் 42 அடி உயரத்திலிருந்து. கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு, என்எல்சி தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
என்எல்சி நிறுவனத்தில் தொடர்ந்து, பணியின் பொழுது ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
மேலும் என்எல்சி நிர்வாகம் பணி மேற்கொள்ளும், ஒப்பந்த தொழிலாளர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் எனச் சக தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


