
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளைப் புதுப்பிக்கும் வகையில் “வேர்களைத் தேடி” சுற்றுப்பயணத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று மாமல்லபுரத்தில் துவக்கி வைத்தார்.
அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களைப் பாதுகாப்பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாகப் பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக “வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின்படி அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களைத் தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலிலிருந்து பயணம் தொடங்கியது. இந்தப் பயணத்தினை அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்,
இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 58 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு செலவில் தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துகுடி, கன்னியாகுமரி, திருநெல்வேல், மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்குப் பயணித்துத் தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

