
குடும்ப ஆட்சியில் ஒருவரை அறிவாளியாகக் காட்ட வேண்டும் என்றால், அவரின் அருகில் கோமாளிகளை உட்கார வைக்க வேண்டும்; அதுவே தமிழக அமைச்சரவையெனப் பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை: ”இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது” எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தென்சென்னை தொகுதி பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகம் திமுக கட்சியின் கையில் சிக்கி திண்டாடுகிறது. 2026 தேர்தலுக்குப் பா.ஜ., தயாராகிவிட்டது எனக் கூற, 2024 தேர்தல் முக்கியமானது. நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 43வது இடத்தில் இருந்த சென்னை 199வது இடத்திற்கு சென்றுள்ளது. வெறும் 12 சதவீத குப்பைகளை மட்டுமே முறையாக அப்புறப்படுத்துகின்றனர். எம்எல்ஏ, எம்.பி., கவுன்சிலர்கள் பணியாற்றாமல் உள்ளதால் சென்னையில் வளர்ச்சி இல்லை.
இந்தியாவின் மிக முக்கியமான நகரமான சென்னை, நம் கண்முன்னே அழிகிறது. இந்த லோக்சபா தேர்தல் சென்னை நகரை மாற்றக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். பா.ஜ., அமைச்சரவையில் உள்ள 75 பேர் மக்கள் பணி ஆற்றக்கூடியவர்கள். ஆனால் ஸ்டாலினின் அமைச்சரவையில் வேலை செய்யக்கூடிய தகுதியும், திறமையும் அற்றவர்களே உள்ளனர். குடும்ப ஆட்சியில் ஒருவரை அறிவாளியாகக் காட்ட வேண்டும் என்றால், அவரின் அருகில் கோமாளிகளை உட்கார வைக்க வேண்டும்; அதுவே தமிழக அமைச்சரவை.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, திருநெல்வேலி மேயர் சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் போட்டுக்கொண்டிருந்தார். உதயநிதி மீது தான் முதல்வர் ஸ்டாலினின் கவனம் உள்ளது; ஆட்சியின் மீது அல்ல. அவரைத் துணை முதல்வராக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். வெள்ள பாதிப்பு, நிகழ்ச்சியென அனைத்திலும் உதயநிதியை அறிவாளியெனப் பில்டப் காட்டும் போட்டோ தேவைப்படுவதால் அவரை முன்னிலைப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.



