
சென்னை: அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரத்திற்கு எல்லோரும் பணிந்து விடுவார்கள் எனப் பாஜகவின் நினைப்புக்கு மரண அடி விழுந்துள்ளது, 15 மாத கால சமரசமற்ற கடும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனச் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி.
கடந்த 15 மாதங்களுக்கும் மேலாகச் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணை குற்றவாளியாக இருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறித்து கரூர் எம்.பி ஜோதிமணி பேசுகையில், “செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. 15 மாத கால சமரசமற்ற சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எவ்வளவோ தனிமை, துயரத்தைத் தாங்கி அசைக்க முடியாத மன உறுதியோடு எதிர்கொண்டு ஈடிணை அற்ற இந்த வெற்றியைச் செந்தில் பாலாஜி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அநீதியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு இந்தியா கூட்டணி தலைவர் கூடச் சமரசம் செய்து கொள்ளாமல் சட்டப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி பெற்று வெளியே வந்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. அமலாக்கத்துறை தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களை அநீதியான முறையில் கைது செய்து வந்துள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எதிர்ப்பையும் எதிர்க்கொண்டுள்ளது. குறிப்பாகச் செந்தில் பாலாஜி வழக்கில், பி.எம்.எல்.ஏ சட்டமே கடுமையாகக் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது.
இனியாவது அமலாக்கத்துறை பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிற ஒரு அரசாங்க நிறுவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதிகாரம் இருந்தால் அந்த அதிகாரத்திற்கு எல்லோரும் பணிந்து விடுவார்கள் எனப் பாஜகவின் நினைப்புக்கு இந்தியா கூட்டணி மரண அடி கொடுத்துள்ளது. இந்தக் கடுமையான காலகட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அசைக்க முடியாத ஆதரவை செந்தில் பாலாஜிக்கு வழங்கி இருக்கிறார். அவருக்கும், அவருக்குத் துணை நின்ற இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


