Joebiden: புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி!

Advertisements

வாஷிங்டன்: ‛‛ புதிய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுப்பதே சிறந்த வழி” என அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகியது குறித்து பைடன் விளக்கமளித்தார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களமிறங்கினர். வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஜோ பைடன் இந்தத் தேர்தலிலிருந்து விலகினார். இதனையடுத்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அதிபர் பைடன் அந்நாட்டு மக்களிடம், தனது முடிவுகுறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சிறந்த வழியென முடிவு செய்தேன். அதுவே, நாட்டை ஒற்றுமைபடுத்துவதற்கான சிறந்த வழி. பொது வாழ்க்கையில் கொண்ட நீண்ட அனுபவத்திற்கு உரிய நேரமும், இடமும் உண்டு. புதுக்குரல்கள், இளமையான குரல்களுக்குத் தற்போது நேரம் வந்துள்ளது.50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டிற்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிபர் எனும் புனிதமான இடத்தில் என்னைச் சுற்றி மிகச்சிறந்த அதிபர் புகைப்படங்கள் உள்ளன. நாட்டை வழிநடத்தும் மிகச்சிறந்த வார்த்தைகளைத் தாமஸ் ஜெபர்சன் எழுதி உள்ளார். அதிபர்கள் மன்னர்கள் அல்ல என்பதை ஜார்ஜ் வாஷிங்டன் நமக்குக் காட்டி உள்ளார். தீமையை நிராகரிக்கத் தூண்டிய ஆபிரஹாம் லிங்கன், பயத்தை நிராகரிக்க வேண்டிய பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோர் இருந்த இந்த அதிபர் அலுவலகத்தை மதிக்கிறேன்.

அதைவிட எனது நாட்டை நான் அதிகம் நேசிக்கிறேன். அமெரிக்க அதிபராகப் பணியாற்றுவது எனது வாழ்க்கையில் மரியாதை. ஆனால் ஆபத்தில் உள்ள ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது எந்தப் பதவியையும் விட முக்கியமானது. அமெரிக்க மக்களுக்காகப் பணியாற்றுவதில் மகிழ்ச்சி பெறுகிறேன். வலிமை அடைகிறேன்.

துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் அனுபவம் மிக்கவர். திறமையானவர். வியக்கத் தக்க வகையில் என்னுடன் இணைந்து பணியாற்றினார். நாட்டிற்கு சிறந்த தலைவராக உள்ளார். தற்போது முடிவு மக்கள் கையில் உள்ளது. அமெரிக்காவை மன்னர்கள், சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தது கிடையாது என்பது மிகச்சிறந்த விஷயம். மக்களே ஆட்சி புரிந்தனர். வரலாறும், அமெரிக்காவின் கொள்கைகளும் மக்கள் கைகளில் உள்ளது. இவ்வாறு பைடன் கூறினார்.

ஒபாமா பாராட்டு

ஜோப்பைடன் முடிவுக்குப் பாராட்டு தெரிவித்து முன்னாள் அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த நாட்டின் புனிதமான நோக்கம் அனைவரையும் விடப் பெரியது. இந்த வார்த்தைக்கு, ஜோப்பைடன், அமெரிக்க மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணியாற்றி உண்மையாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இவ்வாறு பதிவில் ஒபாமா கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *