DMK Vs AIADMK: அதிமுக, திமுக இடையே காரசார விவாதம்!

Advertisements

திருவண்ணாமலை நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் 74 தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி சார்பில் அறிக்கை தயார் செய்த நிலையில் 24 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றிவிட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி திமுகவினர் கூட்டம் முடிந்ததாக அறிவித்து வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது 39 வார்டுகளில் அதிக பெரும்பான்மை பலத்துடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் இருக்கக்கூடிய நகராட்சியில் நகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த நகர மன்ற கூட்டத்தில் முன்னாள் நகர மன்ற தலைவருக்கு இரங்கல் தீர்மானத்துடன் நகர மன்ற கூட்டம் தொடங்கியது.

கூட்டம் ஆரம்பித்த உடனேயே அதிமுக நகர மன்ற உறுப்பினர் திருவண்ணாமலை நகராட்சியில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் கெமிக்கல்கள் வாங்கி இருப்பதாகவும் அது தரமற்ற முறையில் இருப்பதாகவும் அந்தக் கெமிக்கல்கள் எங்கு வாங்கப்பட்டது உரிய பரிசோதனை செய்யப்பட்டதா என அடுக்கடுக்கான கேள்விகளுடன் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நகர மன்ற துணைத் தலைவர் பதிலளிக்கியில் வரும் காலங்களில் நகர மன்ற உறுப்பினர்களின் ஆலோசனையைப் பெற்று கெமிக்கல் வாங்குவது பற்றி ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து மற்றொரு நகர மன்ற உறுப்பினர் தங்கள் பகுதியில் மின்விளக்குகள் முறையாக எரியவில்லையெனக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தார்.தொடர்ந்து பேசிய அதிமுக நகர மன்ற உறுப்பினர் 1, 5, 6, 8, 13, 14, ஆகிய வார்டுகள் மலை பகுதியில் உள்ள வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்களிடம் பட்டா வாங்குவதற்கு மனு பெறப்பட்டு இருப்பதாகவும் பட்டா வழங்கக் கூடியவர்கள் மின் இணைப்பைக் கொடுப்பதில் என்ன பிரச்சனையெனக் காரசார விவாதம் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே நடைபெற்றது.

மேலும் கொசு மருந்து அடிப்பதாக மருந்து வாங்கப்பட்டிருப்பதாகவும் எந்த வார்டிலும் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லையென நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.மேலும் ப்ளீச்சிங் பவுடர் தூவுவதாகக் கூறி கோலமாவு தூவுவதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.அதேபோல் பாதாள சாக்கடை இல்லாத வீடுகளிலும் பாதாள சாக்கடை இருப்பதாக வரி வசூல் செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து விவாதித்தனர்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பட்டா வழங்கும் நீங்கள் ஏன் மின் இணைப்பு வழங்கக் கூடாது கூறியதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி நீங்கள் பட்டா வழங்குவதற்கு மனு பெற்றீர்கள் என அதிமுக உறுப்பினர் கேட்டவுடன் திமுக அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நகராட்சி கூட்டத்தில் 74 தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு தீர்மான நகல் முன் வைக்கப்பட்டு 24 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே திமுக அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதத்தைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி திமுகவினர் நகராட்சி கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அதிமுகவினர் பொதுவாக மெஜாரிட்டி குறைவாக உள்ள அதிமுகவினர்தான் வெளிநடப்பு செய்வார்கள் ஆனால் திருவண்ணாமலை நகராட்சியில் வினோதமாகத் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *