வருஷ கடைசியில் ஷாக் கொடுத்த மல்லிகை!

Advertisements

திண்டுக்கல்:

தொடர் மழை மற்றும் பனிப் பொழிவின் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும், புத்தாண்டில் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளதாலும் திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.4500 முதல் ரூ.5000வரை விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பூ வணிக வளாகத்திற்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கிருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் பூச்சந்தை:

தமிழ்நாட்டிலேயே தோவாளைக்கு அடுத்தப்படியாகப் பூ மார்க்கெட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை உதிரி பூக்கள் ரூ.4500 வரை விலை போகிறது. இதற்குக் காரணம் மார்கழி மாத கோவில் விழாக்கள் மற்றும் தொடர்ந்து புத்தாண்டு உள்ளிட்ட உள்ளது என்பதேயாகும். அதுமட்டுமல்ல கடும் மழை மற்றும் இரவு நேரங்களில் பனிப் பொழிவால் மல்லிகை பூச்சாகுபடியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ:

மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் திருமணம் என்றாலும், பிற சுப நிகழ்ச்சிகள் என்றாலும் பெண்கள் மல்லிகைப் பூச்சூடிக்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இதனால் விலை அதிகமாக இருந்தாலும் அதனை விஷேச வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

தேவை அதிகரிப்பு:

அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா எனப் பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லையெனத் தெரிகிறது. மார்கழி மாதத்தில் அதிக அளவு சுப முகூர்த்தங்கள் இல்லை என்றாலும், சில பகுதிகளில் திருமணங்கள், புதுமனை புதுவிழா, கோவில் விழாக்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

பனிப் பொழிவு:

ஆனால், கனமழை, பனி பொழிவு உள்ளிட்ட காரணங்களால் வரத்து சரிந்துள்ளதால், மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. தை, மாசி வரை வரும் மாதங்களிலும் விலை உயர்வாகவே இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள். தற்போதைய சூழலில் திண்டுக்கல் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ ஒரு கிலோ 4500க்கும், முல்லை பூ 1100 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும்
ஜாதிப்பூ 800 ரூபாய்க்கும் காக்கரட்டான் 750 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

விலை உச்சம்:

மேலும் அரளிப்பூ 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஜா 300 ரூபாய்க்கும், ரோஜா பூக்கட்டு 300 ரூபாய்க்கும்,
சம்பங்கி 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா 220 ரூபாய்க்கும், செவ்வந்திப் 150 ரூபாய்க்கும் தாமரை பூ ஒன்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தபட்சமாக வாடாமல்லி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தாமரை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *