அமெரிக்காவின் சியாட்டிலில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் போலீஸ் வாகனம் மோதியதால் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா மரணம்குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கேலி செய்து பேசும் வீடியோ வெளியான நிலையில், இந்தியா தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 23 அன்று சியாட்டிலில் போலீஸ் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிச் சென்ற ரோந்து கார் மோதி ஜாஹ்னவி கந்துலா கொல்லப்பட்டார். வாகனத்தை ஓட்டி வந்த கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி, மணிக்கு 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் வாகனத்தை ஓட்டிக் கவனக்குறைவாக மாணவியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
பதினொன்றாயிரம் டாலர் கொடுத்தால் போதும்: காவல் துறை அதிகாரியின் கேலி பேச்சு
விபத்தை ஏற்படுத்தி மாணவி இறந்த உடன் அந்தப் போலீஸ் அதிகாரி, சியாட் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் டேனியல் ஆடரர் என்பவருடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், விபத்தில், மாணவி இறந்து விட்டது குறித்து கொஞ்சமும் வருத்தம் கொள்ளாமல் கிண்டலாகப் பேசியுள்ளார். இது அவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ பதிவில் அவர், “ஒரு பெண் இறந்து விட்டாள்….. சாதாரணமான பொண்ணுதான்… ஆமாம் ஒரு செக் தயார் செய்து வையுங்க… பதினொன்றாயிரம் டாலர் கொடுத்தால் போதும்… அவளுக்கு அவ்வளவு தான் மதிப்பு” எனச் சிரித்துக் கொண்டே பேசியுள்ளார்.
இந்திய துணைத் தூதரகம் கடும் கண்டனம்
சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதன்கிழமை, “ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தைக் கேலி செய்யும் வகையில் பேசியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார். “இந்த மிகச் சோகமான வழக்கில் தொடர்புடையவர்கள்மீது முழுமையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சியாட்டில் & வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடமும், வாஷிங்டன் டிசியில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் நாங்கள் இந்த விவகாரத்தை வலுவாக எழுப்பியுள்ளோம். துணைத் தூதரகம் மற்றும் தூதரகம் இந்த விவகாரத்தில் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள்குறித்து தகவல் கோரும் ” என்று இந்திய துணைத் தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. 23 வயதான பட்டதாரி மாணவி ஜனவரி 23 அன்று சியாட்டிலில் போலீஸ் அதிகாரி கெவின் டேவ் ஓட்டிய ரோந்து கார் மோதிக் கொல்லப்பட்டார். செய்திகளின்படி, டேவ் காரை 74 mph (119 kmph) வேகத்தில் ஓட்டிச் சென்றதாகவும், மாணவியின் உடல் 100 அடி (30 மீட்டர்) தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Recent reports including in media of the handling of Ms Jaahnavi Kandula’s death in a road accident in Seattle in January are deeply troubling. We have taken up the matter strongly with local authorities in Seattle & Washington State as well as senior officials in Washington DC
— India in SF (@CGISFO) September 13, 2023
சம்பவத்தைக் கேலி செய்த அமெரிக்க போலீஸ் அதிகாரி
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி டேனியல் ஆடரரின் உடல் கேமராவிலிருந்து சியாட்டில் காவல் துறை திங்களன்று காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் சீற்றம் வெடித்தது. வீடியோ கிளிப்பில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகள் கில்டின் துணைத் தலைவராகப் பணியாற்றும் ஆடரர் – கில்டின் தலைவர் மைக் சோலனுடனான அழைப்பில் விபத்துபற்றிப் பேசுவதைக் கேட்கலாம்.
யார் அந்த ஜாஹ்னவி கந்துலா
அமெரிக்காவின் சவுத் லேக் யூனியனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தவர் ஆந்திராவை சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி டெக்ஸ்டர் அவென்யூ சாலை வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மோதி 100 மீட்டர் தூரம் அவர் தூக்கி வீசப்பட்டார்.



