அதிரடியாக ரூல்ஸை மாற்றிய ஓயோ.. அதிர்ச்சியில் இளைஞர்கள்!

Advertisements

மீரட்:

பிரபல ஹோட்டல் நிறுவனமான ஓயோ இனி வரும் காலங்களில் திருமணமாகாத ஜோடிகளைத் தங்கள் ஹோட்டல்களில் அனுமதிக்கப் போவதில்லை என்று தனது செக் இன் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த விதி படிப்படியாக நாடு முழுக்க உள்ள தனது ஹோட்டல்களில் அமலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் தொடங்கப்பட்டது தான் ஓயோ நிறுவனம். நாம் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே நிச்சயம் ஓயோ ஹோட்டல் இருக்கும்.

ஊர், பெயர் தெரியாத ஹோட்டலில் தங்குவதற்குப் பதிலாகப் பலரும் ஓயோவில் தங்கவே விரும்புவார்கள். ஓயோ நிறுவனத்தின் ஹோட்டல்களில் நல்ல நிலையில் இருக்கும் என்பதால் பலரும் அதில் தான் தங்குவார்கள்.

ஓயோ:

இதுநாள் வரை ஓயோ ஹோட்டல்களில் தங்க வருவோர் திருமணமான ஜோடிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது. இதனால் திருமணமாகாத ஜோடிகள், காதலர்கள் என அனைத்து தரப்பினரும் ஓயோவை பயன்படுத்தி வந்தனர்.

இதை வைத்தே பல மீம்களை கூட நாம் சமூக வலைத்தளத்தில் பார்த்து இருப்போம். இதற்கிடையே ஓயோ நிறுவனம் தனது செக் இன் விதிகளை மாற்றியுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பை ஓயோ நிறுவனம் தனது பார்ட்னர் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் இந்தப் புதிய விதிகள் அமலுக்கு வரும் நிலையில், மெல்ல இது மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.

இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுக்க புதிய விதிகள் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. அதன்படி திருமணமாகாத தம்பதிகள் இனி ஹோட்டலில் செக்-இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆதாரம் சமர்பிக்கணும்:

புதிய விதிகளின்படி, ஆன்லைனில் புக் செய்த விருந்தினர்கள் உட்பட அனைவரும் செக்-இன் செய்யும்போது தங்கள் திருமணமான ஜோடிகள் தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், திருமணமாகாத ஜோடிகள் என்று நினைத்தால் அவர்களைச் செக் இன் செய்ய அனுமதிக்கத் தேவையில்லை என்றும் இந்த முடிவைப் பார்ட்னர் ஹோட்டல் நிர்வாகத்தினரே எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓயோ அதிகாரிகள் சிலர் கூறுகையில், “இது தொடர்பாகக் கடந்த காலங்களில் எங்களுக்குப் பல முறை புகார் வந்துள்ளது. மீரட்டிலிருந்து தான் அதிக புகார் வந்தது.

மேலும் சில நகரங்களில் ஹோட்டல் நிர்வாகத்தினர் திருமணமாகாத ஜோடிகளை மறுப்பதாக விருந்தினர்கள் சார்பிலும் புகார்கள் வந்தன. இதன் காரணமாகவே இதை ஒரு விதியாகவே கொண்டு வர முடிவு செய்துள்ளோம்” என்றார்.

எப்போது அமலுக்கு வரும்:

முதற்கட்டமாக மீரட்டில் உள்ள அதன் பார்ட்னர் ஹோட்டல்களுக்கு இதுகுறித்த அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய செக் இன் விதிகள் அங்கு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்த விதிகளுக்கு மக்கள் எந்தளவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இது மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்தாண்டிற்குள் அது நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

ஓயோ சொல்வது என்ன:

புதிய விதிகள்குறித்து ஓயோ நார்த் பிரிவினர் பிராந்தியத் தலைவர் பவாஸ் ஷர்மா கூறுகையில், “நாங்கள் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மேலும், தனிமனித சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரம் சட்ட அமலாக்க மற்றும் சிவில் அமைப்புகளின் சரியான கருத்துகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. செக் இன் பாலிசிக்களை கண்காணித்து தேவையான மாற்றங்களைத் தொடர்ந்து கொண்டு வருவோம்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *