சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்..!

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு, பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள நேர்காணல்களில் பல்வேறு தரப்பினர் குறித்துச் கருத்து தெரிவித்து வரும் சவுக்கு சங்கர், பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் குறித்து அவதூறாகவும், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (பிரிவு 4) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC 509 – பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிமன்ற தீர்ப்பு:இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதித்துறை நடுவர் சிவசக்தி தீர்ப்பளித்தார். அதில், சவுக்கு சங்கர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

30 நாட்கள் அவகாசம்:அதேவேளையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கும் வகையில், அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருடைய தண்டனை இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தள வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *