நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியில் கோவில் நிலப் பிரச்சினை காரணமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளரும் அவரது சகோதரரும் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்த டால்டன் என்பவர், நெல்லை கண்ணன் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக இவரது சகோதரர் நிக்கோலஸ்-ராஜரத்தினம் உதவி புரிந்து வந்தார். இந்நிலையில், இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் இடையே, அப்பகுதியில் உள்ள மாடசாமி-பேச்சியம்மன் திருக்கோவில் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகக் தெரியவருகிறது. இந்நிலையில், இன்று காலை மாடசாமி-பேச்சியம்மன் கோவில் பகுதியில், செந்தில்குமார் லாரியில் மண் கொட்டச் சென்றபோது, அங்கு வந்த டால்டன் மற்றும் அவரது சகோதரர் நிக்கோலஸ்- ராஜரத்தினம் ஆகியோர் செந்தில்குமாரிடம் கோவில் பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டால்டன் மற்றும் நிக்கோலஸ்-ராஜரத்தினத்தை சரமாரியாகக் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த டால்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கோலஸ்-ராஜரத்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கத்திக்குத்து மோதல் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு தரப்பான செந்தில்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


