Hindi imposition: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…

இந்தியை தவிர பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக்கொள்ள வேண்டும் என இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், ”நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் இந்தி மிக முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது. சுதந்திர போராட்டக் காலத்திலிருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது” என்று அமித் ஷா கூறியிருந்தார்.

இந்நிலையில், அமித் ஷாவின் இந்தக் கருத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம்போலத் தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளைப் பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
#StopHindiImposition” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *