
மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் காசாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடமாகக் கருதப்பட்டது. இதனை தொடர்ந்து, ஜோா்டானிய மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவில் போரை நிறுத்தும் முயற்சியாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளன. சா்வதேச நாடுகளின் இத்தகைய முயற்சிகளை இஸ்ரேல் அலட்சியம் செய்வதையே ராணுவத்தின் இந்த உத்தரவு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் பலத்த சேதமடைந்த நிலையில் தற்போது காசாவில் மக்கள் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சம் அறிக்கை வெளியுட்டுள்ளது.
இதில், காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதல்களில் 61 போ் உயிரிழந்தனா் என்றும் இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,344-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



