எம்.எல்.ஏ.க்களுக்கு 1 லட்சம் படி – விஜய் அரசுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

Advertisements

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் ஓட்டுநர் படியாக மாதம் ரூ.75,000, உதவியாளர் படியாக ரூ.25,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு எம்.எல்.ஏ.க்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இதற்கு எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி, தனது தொகுதியில் மக்களைச் சந்தித்து பணியாற்றுவதற்கு போதிய வாகன வசதி இல்லை என்றும், உதவியாளருக்கு ஊதியம் வழங்கும் அளவுக்கு தனிப்பட்ட வசதி இல்லை என்றும் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மேலும், இதுபோன்ற நிலையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் உள்ளிட்ட வசதிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனப்படி மற்றும் உதவியாளர் படியாக மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ள நடிகை கஸ்தூரி, “எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபோன்ற கூடுதல் வசதிகளை வழங்க மக்களின் வரிப்பணம் ஏன் செலவிடப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பல்வேறு வசதிகள் ஏற்கனவே வழங்கப்படும் நிலையில், கூடுதலாக இதுபோன்ற சலுகைகள் வழங்குவது தேவையற்ற செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வசதியான பின்னணி கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுவது குறித்து அவர் விமர்சனம் செய்துள்ளார்.

“பெரும்பான்மையான மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளும் சிக்கனமான முறையில் செயல்பட வேண்டும்” என்ற கருத்தையும் கஸ்தூரி முன்வைத்துள்ளார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் சம்பளம், பயண வசதிகள், சுங்கக் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் வரிப்பணம் ஆடம்பர வசதிகளுக்காக வீணடிக்கப்படக் கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, விஜய் அரசு அறிவித்துள்ள இந்த கூடுதல் செலவுத் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *