Israel Hamas war:’ஹமாஸ் இதைச் செய்தால் போர் முடிந்துவிடும்…’ இஸ்ரேல் திட்ட வட்டம்!

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்புலத்திலிருந்து செயல்பட்ட முக்கிய புள்ளியான, ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்கி அழித்துள்ளது. இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார். இந்நிலையில், போர்நிறுத்தம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காசா மக்களிடம் வீடியோ வாயிலாகப் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

“ஓராண்டுக்கு முன் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் மரணமடைந்து விட்டார். அவர் ராபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்களால் கொல்லப்பட்டார். காசாவில் நடந்து வரும் போர் இத்துடன் முடியவில்லை. ஆனால் இது முடிவிற்கான ஆரம்பமாகும்.

காசா மக்களிடம் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஹமாஸ் அமைப்பினர் தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்து, பணய கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே இந்தப் போர் முடிவுக்கு வரலாம். ஹமாஸ் அமைப்பினரிடம் தற்போது 23 நாடுகளின் குடிமக்கள் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 101 பேர் பணய கைதிகளாக உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. பணய கைதிகளை எங்களிடம் ஒப்படைக்க வருபவர்களின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் பணய கைதிகளைத் துன்புறுத்துபவர்களிடம் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் உங்களை வேட்டையாடி, நீதியை நிலைநாட்டும்.

மேலும் காசா மக்களுக்கு நம்பிக்கைக்குரிய மற்றொரு செய்தியையும் கூறுகிறேன். ஈரானால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பு நமது கண் முன்னாள் அழிந்து கொண்டிருக்கிறது. நஸ்ரல்லா, மொஹ்சின், ஹானியே, டெய்ப், சின்வார் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். தனது சொந்த மக்களிடமும், ஈராக், சிரியா, லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும் ஈரான் கட்டமைத்த பயங்கரவாத ஆட்சியும் விரைவில் முடிவுக்கு வரும்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும், செழிப்பும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவரும், ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைய வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து இருள் சக்திகளை அழித்து, ஒளி மற்றும் நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.”
இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *