பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்‌ஷன்!

Advertisements

தான் போட்டியிட விரும்பிய தொகுதியை ஒதுக்காததால் அண்ணாமலை அப்செட் ஆனதாக கூறப்படும் நிலையில், இன்று பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை. என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமையே வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்.

இதற்கிடையே, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாமலை போட்டியிடும் தொகுதிதான் இழுபறியாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது பெயர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்துர் தொகுதியிலும், அவிநாசி தொகுதியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மயிலாப்பூர் தொகுதியில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், கோவை வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோவை வடக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால், அந்த தொகுதி வானதி சீனிவாசனுக்கு ஒதுக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் கடும் அப்செட் ஆன அண்ணாமலை, பாஜக ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அண்மையில் பிரதமர் மோடி கோவை வந்தபோது அவரை வரவேற்கவும் அண்ணாமலை செல்லவில்லை.

பிறகு, அண்ணாமலையுடன் பாஜக தலைவர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால், கோவை வடக்கு தொகுதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான பேச்சுவார்த்தையால்தான் வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அண்ணாமலை நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜகவைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்றத் தன்மை மற்றும் திமுகவின் துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பிரமாண்டமாகவும் ஒரு தெளிவான நோக்கத்துடனும் முன்னேறி வருகிறது. நாடு இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழ்நாடு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்சித் தொண்டனாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், நமது வெற்றி வேட்பாளர்களான பாஜக மற்றும் பிற என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *