ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – வைகோ வலியுறுத்தல்.!

ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர், குமரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருவதாகவும், தற்போது அங்கு போர் முற்றிவருவதால் மீனவர்களின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த பாபின் செசாரியோ, சத்யரீமான் ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக அழைத்துவர உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த மனு கடந்த 11ஆம் தேதி நீதியரசர் பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆனால், இதுவரை ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறைகூறியுள்ள வைகோ, ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *