தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டுசெல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் செல்போன்கள் வைக்க கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெரிய கோவில்களில் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிடுவதாகவும், இதனால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு வந்தது. இந்நிலையில் கோவில்களில் செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு அது இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் இருந்து பெறப்படும் செல்போனிற்கு ஐந்து ரூபாய் பெற்றுக் கொண்டு டோக்கன் போடப்பட்டு, அவர்களுடைய முகத்தை ஸ்கேன் செய்து செல்போன் எண்ணைப் பதிவு செய்து தனித்தனி அறையில் வைக்கப்படுகின்றன.
பக்தர்களிடம் கொடுக்கப்படும் டோக்கன் எண்ணிற்கும் அவர்களின் செல்போனில் உள்ள டோக்கன் எண்ணையும் சரிபார்த்து அதன் பின்பு பக்தர்களிடம் அவரவர் செல்போன்கள் ஒப்படைக்கப்படும். கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதித்துள்ளதைப் பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி விநாயகர், மருதமலை முருகன், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் என ஐந்து கோவில்களுக்குப் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ராஜகோபுரம், மற்றும் மேற்கு புறக் கோபுரம் ஆகிய இடங்களில் செல்போன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை ஐந்து ரூபாய் மின்னணு ரசீதுடன் கட்டணம் பெற்று லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குள் இன்று முதல் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஐந்து ரூபாய் செலுத்தி செல்போனைப் பாதுகாப்பாக வைத்துச் செல்ல வேண்டும் – மீறி ஆலயத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

