
ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடளுமன்றப் பாதுகாப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது. இதில், கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. இதனால், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்தியா உள்பட தனது 5 நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லலாம் என்று ஈரான் தெரிவித்தது. இதையடுத்து, ஹோர்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரான் நாடளுமன்றப் பாதுகாப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஹோர்முஸ் ஜலசந்தியை ஒரு கப்பல் கடப்பதற்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க கருவூலத்துறை தலைவர் ஸ்காட் பெசென்ட் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹோர்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை மீண்டும் அமெரிக்கா கைப்பற்ற உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார்.




