
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்களில் அதன் தலைவர் திருமாவளவன் பெயர் இடம் பெற்றிருப்பதை விட, தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு அவர் ஏன் வருகிறார் என்பது குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
மாநில அரசியலுக்கு வரவேண்டிய காரணம் குறித்து திருமாவளவன் கூறிய காரணம், தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் சூழல் மாறும் என்பதால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இரண்டாவது முறையாக காட்டுமன்னார் கோவில் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளார்.
2016 ஆம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்ட போது அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். 2016ம் ஆண்டு சூழலை விட இன்று மோசமடைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு எதிராக ANTI-INCUMBENCY வாக்குகள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமல்ல, அரசியலுக்குப் புதிய வரவான நடிகர் விஜய்க்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் வாக்குகள் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
சங்பரிவாரங்கள் தலித் இளைஞர்களை விழுங்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இப்படியிருக்கும் சூழலில் திருமாவளவன் தமிழக அரசியலுக்கு வரவேண்டிய நிலைக்குக் காரணம் குறித்து என்ன சொல்கிறார் என்றால், மாநில அரசியலில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது.
இந்தப் பதிலில் நமக்கு எழும் சந்தேகங்கள் எல்லாம், அவர் மக்களவை உறுப்பினராக இருந்தபோது மாநில அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டு தானே இருந்தார். தமிழகத்தில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு எதிரான போராட்டங்களில் அவர் பங்கேற்றவர் தானே.. உண்மையான தமிழ்த் தேசியத்துக்கு பங்கம் ஏற்படும்போதெல்லாம் அவர் குரல் எழுப்பி வந்தவர்தானே.
டெல்லியில் இருந்தாலும் தமிழகப் பிரச்னை என்றால் ஓடி வருபவர்தான் திருமாவளவன். அப்படியிருக்கையில் மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக அவர் கூறியிருப்பது புதிராக உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் இந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் வெகுவாக மாறப்போவதாக அவர் சொல்லியிருப்பது கவனிக்கவேண்டியதாக உள்ளது.
திருமாவின் மூவ் 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலுக்கான ஒரு மெகா ‘ஸ்கெட்ச்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அவரது விளக்கம் திமுக கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் யோசிக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் சில கேள்விகள் எழுகின்றன. திமுக கூட்டணியில் இதுவரை கூட்டணி கட்சி என்ற நிலையில் இருந்த விசிக, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதா? அதாவது தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாமல் வி.சி.க வின் உதவியால் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் அமர வாய்ப்பிருப்பதால் திருமா அதற்கு தன்னைத் தயார் படுத்தி கொள்கிறாரா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஏனென்றால் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு வகிப்பதே சிறந்தது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாரோ என்றும் கேட்கின்றனர். இதேபோல் மற்றொரு கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் தற்போது தலித் அமைப்புகளின் எண்ணிக்கையும், தலித் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இது தலித்துகளின் பிரதான விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குவங்கியில் ஓட்டையை ஏற்படுத்திவிடும், அதனால் சமூகம்-அரசியல்-பொருளாதார தளத்தில் தலித்துகளின் நிலை கீழிறங்கி விடுமோ என்ற அக்கறையின் காரணமா? என்றெல்லாம் வினா எழுப்பி வருகின்றனர்.
இவற்றைத் தவிர்க்க மாநில அரசியலில் திருமா களமிறங்கினால் மட்டுமே வாக்குகள் சிதறிப்போகாமல் தலித் விடுதலை அரசியலை முன்னெடுக்க முடியும் என்று நினைக்கிறாரோ என தோன்றுகிறது. அடுத்ததாக, தமிழக அரசியலில் நடிகர் விஜயின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. விஜயின் அரசியல் நுழைவு இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளில் அதிர்வை ஏற்படுத்தியிருப்பதை அந்தக் கட்சிகள் மறுத்தாலும் அரசியல் பார்வையாளர்கள் உறுதிபடுத்துகின்றனர்.
பெரிய கட்சிகளுக்கே அந்த நிலை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் நிலை என்னவாகும் என்று யோசிக்கவைக்கிறது. இவற்றை தடுத்து நிறுத்த திருமாவளவன் போன்ற ஆளுமைகள் மாநில அரசியலில் முழுநேரமாக களமாடுவது தான் சரி என்று விசிக தலைமை நம்புகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியைப்போல் சாதி ரீதியான கட்சி என்ற நிலை தற்போது வெகுவாக மாறியுள்ளது. அந்த மாற்றத்தை திறம்பட திருமாவளவன் செய்து வருகிறார்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு பிரச்னையில் முதல் குரல் எழுப்புவராக அவர் உள்ளார். 80 களிலிருந்து தமிழ்த்தேசியக் கருத்தியலில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆனைமுத்து தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் பல தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து தமிழ்த்தேசியக் கருத்தியலை தீவிரமாக வளர்த்து வந்தவர் திருமாவளவன். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய கருத்தியலின் விளக்கம் இளைஞர்களிடம் தவறாக கற்பிக்கப்பட்டு வருவதாகவும், அந்தக் கருத்தியல் சாதியவாத தமிழ்த்தேசியம் என்றும் திருமாவளவன் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
தமிழ்த்தேசியம் என்ற சொல் இப்போது பிரலமாகி உள்ளது. சமூக ஊடகங்களில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் சாதி ஆணவப்போக்கை ஆதரிப்பவர்களாகவும், ஆணவக்கொலைகளைக் கண்டு மவுனம் காப்பவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. இது உண்மையான தமிழ்த்தேசியத்துக்கு நேர் எதிரான போலி தமிழ்த்தேசியம் என்பதால் பாரம்பரியமாக அந்தக் கருத்தியலோடு வாழ்ந்துவரும் சிந்தனையாளர்கள் அனைவரும் திருமாவளவனுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
தற்போது வேரூன்ற காத்திருக்கும் சாதியவாத தமிழ்த்தேசியத்துக்கு அவர்கள் ஆதரவு எப்போதும் இல்லை. ஆனால், ஆபத்தான அந்தக் கருத்தியல் புதிய தலைமுறையினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது நாளைய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் பிரதிபலிக்கும் என்பதால் உண்மையான தமிழ்த்தேசியம் என்பது சாதிகளை கூறுபோடும் கருத்தியல் அல்ல என்ற கருத்தை இன்னும் வேகமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற தேவை உள்ளது.
இதுவும் திருமாவின் மனமாற்றத்துக்கு ஒரு காரணமாக சொல்லமுடியும் என்கின்றனர் தமிழ்த்தேசியர்கள்.
90 களில் இருந்த திருமாவளவன் வேறு இன்றைய திருமாவளவன் வேறு. எதையும் தீர்க்கமாக ஆலோசித்து முடிவெடுக்கும் தலைமைப் பண்பு அவரிடம் இருப்பதை அனைத்துக் கட்சியினரின் கருத்தாக உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மறைந்த நல்லகண்ணுவைப் போல் அனைத்துக் கட்சிகளாலும் போற்றப்படும் பக்குவப்பட்ட தலைவராகவும், பல நேரங்களில் கிங் மேக்கராகவும் போற்றப்படும் தலைவராக அனைத்துச் சமூகத்தினரும் விரும்பும் நல்லிணக்கத் தலைவராகவும் திருமாவளவனின் படிநிலை உயர்ந்துள்ளது.
அப்படிப்பட்ட திருமாவளவனின் முடிவு ஒட்டுமொத்த சமூகத்துக்குமானதாகவும், உண்மையான தமிழ்த்தேசியத்தை மீளுருவாக்கம் செய்யவும் அவர் சட்டப்பேரவைக்குள் செல்வது நன்மையைத் தான் தரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.



