ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா மிதக்கும் கப்பல் போன்ற சொகுசு கேரவனில் வந்து மனுத்தாக்கல் செய்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டுபடை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா தனித்து போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு, தனி சொகுசு கேரவனில் ஆலங்குளம் வந்த அவர், அங்குள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “2026 தேர்தல் களத்தை நான் சந்திக்கிறேன். கடந்த தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால் அதை விட்டுக்கொடுக்கக்கூடாது என்று இந்த முறை, நானே தேர்தலில் போட்டிடுகிறேன்.
திமுக, அதிமுக என எத்தனை கட்சிகள் வந்தாலும், தேசிய கட்சிகள் போட்டியிட்டாலும் என்னுடைய பலம் என்ன என்பது எனக்கும், என் மக்களுக்கும் தெரியும். ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எங்களை கூட்டணிக்கு அழைத்தார்கள். ஆனால், நாங்கள் கூட்டணிக்கு போக தயாராக இல்லை.
ஆலங்குளத்தில் இந்த முறை பனங்காட்டுப் படை பெறும் வெற்றி, அடுத்தடுத்த தேர்தல்களில் பிற தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும். ஆலங்குளத்தில் இருந்து எங்களுடைய வெற்றி தொடங்கும். ஆலங்குளம் தொகுதி மக்கள் தொண்டர்கள் அல்ல; என்னுடைய உறவுகள். பிற கட்சிகள் போல தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விரும்பவில்லை.
மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு என்ன தேவையோ அதை நான் செய்து தருவேன்” என உறுதியளித்தார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. மறைந்த கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார் ஆகியோருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார்.
இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், திடீரென அரசியலில் குதித்த ராக்கெட் ராஜா, பனங்காட்டுப்படை என்கின்ற கட்சி ஒன்றை தொடங்கினார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சி சார்பில் ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் போட்டியிட்டார். அவருக்காக ராக்கெட் ராஜா தனி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி பிரச்சாரம் செய்தார்.
அந்த தேர்தலில் ஹரி நாடார் யாரும் எதிர்பார்த்திராத வகையில் 37,727 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்தார். தற்போது , ராக்கெட் ராஜாவிடம் இருந்து ஹரி நாடார் பிரிந்து விட்டார். மேலும், பண மோசடி வழக்கில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். ராக்கெட் ராஜா மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நெல்லைப் பேராசிரியர் செந்தில்குமார், கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவைப் போலீஸார் தேடிவந்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், 9 வது மாடியில் ராக்கெட் ராஜா தங்கியிருக்கும் தகவல், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில், அதிகாலையில் அதிரடியாக ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸார், ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்தனர்.
ராக்கெட் ராஜாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள், வி.ஐ.பிக்கள் நெருங்கிய தொடர்பு உஉண்டு. ராக்கெட் ராஜா கைதானவுடன், போலீஸ் உயரதிகாரிகளுக்கு மூன்று வி.வி.ஐ.பி-க்களிடமிருந்து போன் அழைப்புகள் போயுள்ளது. ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறை, வி.வி.ஐ.பி ஒருவரின் உதவியாளர் பெயரில் முன்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்தால், இந்த ஹோட்டலில்தான் ராஜா தங்குவது வழக்கம். அதன்படி, அங்கு தங்கியிருந்த ராக்கெட் ராஜாவை சந்திக்க அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வருவதுண்டு. அதில், போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரும் அடக்கம். அந்த போலீஸ் அதிகாரி ராக்கெட் ராஜாவை ஆ.ஆர் என செல்லமாக கூப்பிடுவார். ,
ராக்கெட் ராஜா தங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார், உதவி கமிஷனரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘நான்தான் வந்திருக்கிறேன்… கதவைத் திற ஆர்.ஆர்…’ என்று ரகசிய கோட் வேர்டை பயன்படுத்தி கூறியுள்ளனர். இதையடுத்து, தைரியமாகக் கதவைத் திறந்தார் ராக்கெட் ராஜா.
அப்போது, துப்பாக்கியோடு காத்திருந்த போலீஸைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துப் போனார். இவர் ,கைதானதையடுத்து மூன்று விவிஐபி-க்களிடமிருந்து போலீஸ் உயரதிகாரிகளுக்கு போன் அழைப்புகள் வந்தன. அவர்களில் ஒருவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்.
இன்னொருவர், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர். மற்றொருவர் சினிமா பிரமுகர். இதையடுத்து, ராக்கெட் ராஜா மீதான பிடியை போலீசார் தளர்த்தியதாக கூறப்படுகிறது. ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பாய்ந்தது. இந்த பிரிவில் தன்னை கைது செய்தது தவறு என நீதிமன்றத்தில் முறையிட்டு அவர் ஜாமீன் பெற்றதால் புழல் சிறையில் இருந்து 2023ம் ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது, அவர் கேரளாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு விசாரணைக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக இதே போன்ற கேரவன் வாகனத்தில் கேரளாவில் இருந்து நெல்லைக்கு ராக்கெட் ராஜா வந்தார்.
கேரளாவில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த பென்ஸ் கேரவனை வாடகைக்கு எடுப்பதாக கூறப்படுகிறது. இந்த கேரவனில் இல்லாத வசதிகளே இல்லை என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். தனது பாதுகாப்பு கருதி இது போன்ற கேரவனில் ராக்கெட் ராஜா வலம் வருவதாக கூறப்படுகிறது.


