International Migrants Day 2023: சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்!

Advertisements

யாதும் ஊரே யாவரும் கேளிர்.. கணியன் பூங்குன்றனார் வாக்கு.. புவியின் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும் சிதறிக் கிடப்பாய் என்பது புகழ்பெற்ற ஹீப்ரு வாசகம்.

இன்று உலக நாடுகளில் வாழும் மக்களில் பூர்வ குடிகளை மட்டுமே கொண்ட நாடு என ஒன்று தனியாக இருக்க வாய்ப்பில்லை. ஆதியில், கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் தன் தேவைகளின் பொருட்டு பல திசைகளுக்குப் பயணித்தனர்.

பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் ரீதியாகவும், மற்றும் போர் காரணங்களாலும் தன் நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டை தேடி சென்று குடியுரிமைப் பெற்று அங்கேயே வாழவும் தொடங்குகிறார்கள். அவ்விதம் புலம் பெயர்ந்த மக்களுக்கான நாளாக டிசம்பர் 18-ம் தேதியை “புலம் பெயர்ந்தவர்களுக்கான தினம்” ஆக ஐ.நா.சபை கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 4 -இல் அறிவித்தது. அது ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

சமீபத்திய பெரிய புலம்பெயர்வு:

பொதுவாக இரண்டு வகையான புலம்பெயர்வுகள் உள்ளன. ஒன்று போர் அல்லது உள்நாட்டு கலவரத்தால் புலம்பெயர்வது. அந்த வகையில் சமீபத்தில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் காரணமாக, அங்கு வாழ்ந்து வந்த ஓர் இனத்தின் பெரும்பான்மையான மக்கள் கனடா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறினர். மற்றொரு வகை, வேலை தேடி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்பவர்கள். இவர்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக செல்வதில்லை, தனித்தனி நபராக சென்று பின்னர் அங்கேயே குடியுரிமைப் பெற்று வாழ்பவர்கள். உண்மையில் போரினால் புகலிடம் தேடி வேறு நாட்டுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை விட, இவர்களே எண்ணைக்கையில் அதிகம்.

கருத்து:

சமீபத்தில் பியூ ஆராய்ச்சி நிறுவனம் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சுமார் 24 கோடிக்கு மேல் புலம்பெயர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையாகும். உலகத்தில் உள்ள அனைத்து புலம் பெயர்ந்த மக்களையும் வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால், அந்த நாடு உலகின் ஐந்தாவது மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்கும்.

புலம்பெயர்வில் இந்தியர்கள்:

1970 காலகட்டத்தில் இந்தியர்கள் வேலைத் தேடி, வளைகுடா நாடுகளுக்கு படை எடுக்கத்தனர். பின், படிப்படியாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். சுமார் மூன்று கோடி மக்கள்தொகை கொண்ட கனடா நாட்டில் 2.5 சதவிகிதமும், அமெரிக்காவில் சுமார் 6 சதவிகிதமும், அரபு நாடுகளில் சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புலம் பெயர்ந்த இந்தியர்கள் வாழ்கின்றனர். இதில் இந்தியர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து செல்லும் நாடு அமெரிக்கா.

புலம்பெயரும் குழந்தைகள்:

யூனிசெஃப் நடத்திய ஆய்வறிக்கையின் படி சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதுகாப்பான இடம் தேடி புலம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.

மரணம்:

போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களினால் அகதிகளாக செல்லும்போது நடைபெறும் கலவரம் மற்றும் இயற்கை பேரிடர்களாலும் பலர் இறந்து விடுகிறார்கள்.
புலம் பெயர்வது இன்றுவரை தொடர்கதையாகி வருகிறது. அவர்களையும் சகோதரத்துவத்தோடு அரவணைப்பது அனைவரது கடமையாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *