விண்வெளித் துறையில் இந்தியா முன்னேற்றம் – மோடி பெருமிதம்.!

Advertisements

விண்வெளித் துறையில் இந்தியா தலைமையாக உருவெடுத்துள்ளதாகவும், விண்வெளித்துறையில் அடுத்தடுத்துப் புதிய சாதனைகளைப் படைப்பது இந்திய அறிவியலாளர்களின் இயல்பு என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்3 விண்கலம் நிலவின் தென்துருவப் பகுதியில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் நாள் தரையிறங்கியது. இந்தச் சாதனையை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 23ஆம் நாள் தேசிய விண்வெளி நாளாகக் கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன்படி கடந்த ஆண்டு முதல் தேசிய விண்வெளி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, வானியல், வான் இயற்பியல் தொடர்பான பன்னாட்டுப் போட்டியை இந்தியா ஏற்று நடத்தியதையும், அதில் 60 நாடுகளைச் சேர்ந்த முந்நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றதையும் சுட்டிக்காட்டினார்.

அந்தப் போட்டியை இந்திய நடத்தியதும், அதில் இந்திய இளைஞர்கள் பதக்கங்கள் வென்றதும் விண்வெளித் துறையில் இந்தியா தலைமையாக உருவெடுத்துள்ளதன் அடையாளங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விண்வெளித்துறையில் அடுத்தடுத்துப் புதிய சாதனைகளைப் படைப்பது இந்திய அறிவியலாளர்களின் இயல்பு என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஈராண்டுகளுக்கு முன் நிலவின் தென்துருவத்தில் செயற்கைக்கோளைத் தரையிறக்கிய முதல் நாடு என்ற வரலாற்றை இந்தியா படைத்ததாகவும் தெரிவித்தார்.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்பதே தமது அரசின் கொள்கை என்றும், கடந்த பதினோராண்டுகளில் விண்வெளித்துறையில் மாபெரும் சீர்திருத்தங்களை இந்தியா செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *