Advertisements

போராட்ட மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள் என்று நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தில்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சென்னையில் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது, மேடையில் பேசிய அவர், “இது மாணவர்களின் போராட்டம், இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். மேலும், இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள் என்று தெரிவித்தார். நான் விஜய்யின் தீவிர ரசிகை என்றும், தான் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துவிட்டு வந்தேன் என்றும் கூறினார்.
அவரது பேச்சுக்குப் போராட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தொடர்ந்து, பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில், “நான் பேசவா, போகவா?” என்று சனம் ஷெட்டி கேட்க, “போய்விடுங்கள்” என்று போராட்டக்காரர்கள் பதிலளித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சனம் ஷெட்டி, “இது பேச்சுரிமையை பறிக்கும் செயல், யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை மாணவர்களுக்காக பேசவே வந்துள்ளதாகக் கூறினார். தொடர்ந்து எதிர்ப்பு நீடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு தன்னை வெளியேறச் சொன்னார்கள் என்று தெரிவித்தார். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம் என்று குற்றம்சாட்டினார். இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்த யாராக இருந்தாலும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் போராட்டத்தில் ஏராளமான திரைப் பிரபலங்கள் இருந்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும், அவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Advertisements



