
இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை வர்த்தக ஒப்பந்தத்தை காட்டி அச்சுறுத்தி முடிவுக்கு கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வணிக மன்றமான மியாமியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக அச்சுறுத்திய பின், இந்தியாவும் பாகிஸ்தானும் போரை முடிவுக்கு கொண்டு வந்தன என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 மாதங்களில் நீண்ட காலமாக நடந்து வந்த கொசோவா-செர்பியா, காங்கோ-ருவாண்டா உள்ளிட்ட எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது இதுவரை 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறி வந்த நிலையில் இந்த முறை 8 விமானங்கள் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், இதுவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் 58 ஆவது முறையாக இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியுள்ளார் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.




