
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கையை ‘வருந்தத்தக்கது’ என சீனா வர்ணித்துள்ளது. பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது. தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் அண்டை நாடுகளே. அவை இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகள். சீனா பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறது.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலன்களை கருத்தில் கொண்டு இரு தரப்பும் அமைதியாக இருந்து, கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும், மேலும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.பாகிஸ்தானின் ‘இரும்புப் போன்ற நெருங்கிய நட்பு நாடான’ சீனா, பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த போதிலும், கட்டுப்பாடுடன் செயல்படவும், தாக்குதல் குறித்து விரைவான விசாரணை நடத்தவும் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானின் துணைப் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய வாங் யி, நிலைமைகளை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்ப்பது உலகளாவிய பொறுப்பு எனவும் வலியுறுத்தினார். மோதல் இந்தியா அல்லது பாகிஸ்தான் இருவரின் அடிப்படை நலன்களுக்கும் உதவாது, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்காது என்பதால், முடிந்தவரை விரைவில் பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவளிப்பதாகக் கூறினார்.
“இரும்புப் போன்ற நண்பராகவும், அனைத்து காலகட்டங்களிலும், கூட்டுப் பங்காளராகவும், பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை சீனா முழுமையாகப் புரிந்துகொள்கிறது மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கிறது’ என்று வாங் கூறியிருந்தாலும், ஒட்டுமொத்த செய்தியானது பதற்றத்தைத் தணிப்பது மற்றும் இரு தரப்பும் கட்டுப்பாடு காப்பது என்பதையே வலியுறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


