
தமிழகத்தில் திமுக உடனான உறவை முறித்த காங்கிரஸ் புதிய கூட்டணியை அமைத்துள்ள நிலையில், மாநிலக் கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக தொடர்ந்து வலுவடைவதைத் தடுக்க இந்தியா கூட்டணி வரும் ஜூன் 6ம் தேதி அவசரமாகக் கூடுகிறது. இந்த நகர்வு இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்குமா? அடுத்து என்ன நகர போகிறது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த முடிவுகளுக்குப் பிறகு, இனிவரும் காலங்களில் நாட்டில் தேர்தல்கள் நடத்தப்படும் விதம் குறித்து எதிர்க்கட்சிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்திய பாஜக,அங்கு முறைகேடுகள் மூலமாகத் தேர்தலையே திருடிவிட்டது என்றும் அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனது ஆட்சியை இழந்த அந்தத் தருணத்தில் இருந்தே, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வழக்கமாக தேசிய அரசியலில் மற்ற கட்சிகளுடன் இணங்கிப் போகாமல், தனக்கென ஒரு தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முற்றிலும் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளது.
ராகுல் காந்தியும் தங்களுக்குள் காலம் காலமாக நிலவி வரும் உள்முகக் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக மறந்துவிட்டு, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளதால், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தென்னிந்திய அரசியலிலும் யாரும் எதிர்பாராத பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறன. முக்கியமாக தமிழகத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக உடனான தனது அரசியல் உறவை காங்கிரஸ் கட்சி திடீரென முறித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த தேர்தலில் களம் கண்டு புதியதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற்றுள்ள முன்னணி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.
மற்றொருபக்கம் அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கட்சியிடம் தனது ஆட்சியைப் பறிகொடுத்த சிபிஎம் கட்சி, சமீபகாலமாக காங்கிரஸின் செயல்பாடுகளை மிகக் கடுமையான முறையில் விமர்சித்து வருகிறது.இப்படிப்பட்ட பல்வேறு உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் மற்றும் திருப்பங்களுக்கு மத்தியில், நாட்டில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண அரசியல் சூழ்நிலையை விரிவாக ஆய்வு செய்வதற்காக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி அவசரமாகக் கூடவுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, டெல்லியில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் “எதிர்க்கட்சி அரசியல் – அடுத்தகட்டப் பாதை” என்பதுதான் மிக முக்கியமான விவாதப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை இல்லாத காரணத்தாலேயே ஆளும் பாஜக தொடர்ந்து தேர்தல் களங்களில் மிக வலுவடைந்து வருவதாகவும், இதனால் சமீபகாலமாகப் பல்வேறு மாநிலக் கட்சிகள் தங்களின் செல்வாக்கை இழந்து கணிசமாக பலவீனமடைந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கவலையும் அச்சமும் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தேர்தல்களில் தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் தலைவர்கள் விரிவாக விவாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இப்படி பல அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில், நாட்டின் எதிர்கால அரசியல் திசையைத் தீர்மானிக்கும் நோக்கில் இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி பார்த்லும், இந்திய அரசியல் வரலாற்றில் “இந்தியா” கூட்டணி போன்ற மாற்று முன்னெடுப்புகள் ஆளும் கட்சிக்கு ஒரு வலுவான ஜனநாயக எதிர்ப்பைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதிலும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் ஒற்றுமையின்மை காரணமாக பாஜக நாளுக்கு நாள் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், இதனைத் தடுப்பதற்கும், தங்களுக்குள் இருக்கும் பிளவுகளைச் சரிசெய்வதற்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் மீண்டும் ஒருமுறை அவசரமாகக் கூடி விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதும் கவனிக்கத்தக்க விஷயமும்கூட.
ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் திமுகவை விட்டு விலகி தவெகவுடன் கைகோர்ப்பது, கேரளாவில் சிபிஎம் – காங்கிரஸ் மோதல், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் தனிப்பட்ட அரசியல் இழப்புகள் என மாநிலத்திற்கு மாநிலம் முரண்பாடுகள் நீடிக்கும் வரை, தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு ரொம்பவும் கடினமான சவாலாகவே இருக்கும்.
ஜூன் 6ம் தேதி நடக்கும் இந்த அவசரக் கூட்டத்தில், தலைவர்கள் தங்களின் சுயநல மற்றும் பிராந்திய அரசியல் கணக்குகளைத் தாண்டி, தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளுக்கு எதிராக ஒரு பொதுவான செயல்திட்டத்தை உருவாக்கினால் மட்டுமே இந்த இந்தியா கூட்டணியால் ஆளும் கட்சிக்குத் தேர்தல் களத்தில் ஒரு உண்மையான சவாலை அளிக்க முடியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.



