
பெங்களூரு:
கர்நாடகா அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதைப் பெற நடிகர் கிச்சா சுதீப் மறுத்துள்ளார்.
கன்னட திரையுலகில் 2019ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், பாடகர்களுக்கான விருது கர்நாடகா அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ‘பயில்வான்’ திரைப்படத்துக்காக நடிகர் கிச்சா சுதீப்பிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் தாமதமாக இந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிச்சா சுதீப், தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருதைப் பெற மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”எனக்குச் சிறந்த நடிகருக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஆனால், விருதுகள் எதையும் பெறக் கூடாது என்ற முடிவில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன். அதனைத் தொடர விரும்புகிறேன்.
நடிப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்த இன்னும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர்.
இந்த விருதை நான் பெறுவதை விட அவர்கள் பெற்றால் சிறப்பானதாக இருக்கும். மக்களை மகிழ்விக்கும் வகையிலான எனது அர்ப்பணிப்பான பணி என்பது தொடரும்.
விருது எதையும் எதிர்பார்க்காமல் இந்தப் பணியைத் தொடருவேன். இந்த விருதுக்கு என்னை நடுவர் குழுத் தேர்வு செய்துள்ளது என்பது இன்னும் என்னைச் சிறப்பாகப் பணியாற்ற ஊக்குவிக்கும்.
அதேபோல் இந்தக் கவுரவத்தை நிராகரிப்பதற்காக நடுவர் குழு மற்றும் மாநில அரசிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதோடு நீங்கள் எனது முடிவை மதித்து எனக்கான விருப்பத்தை அங்கீகரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
கிச்சா சுதீப் அரசின் விருதை மறுத்துள்ளது கர்நாடகாவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
