Independece Day: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Advertisements

பாதுகாப்பு பணியில் 3,500 போக்குவரத்து போலீசார் மற்றும் 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி:இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளைக் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளைக் காலை 7.30 மணிக்குத் தேசியக்கொடி ஏற்றிச் சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும்.

இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே சுதந்திர தின விழா முழு ஒத்திகை நிகழ்ச்சி டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த முப்படை வீரர்களும் பங்கேற்றனர். மேலும் துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒருகட்டமாகப் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட்டது. ஒத்திகை நிகழ்ச்சிகள் காரணமாகச் செங்கோட்டையைச் சுற்றி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர். செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாகக்கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *