BJP: தாமரை சின்னம் ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Advertisements

சென்னை: பாஜகவின் சின்னமாகத் தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் ரூ.10,000-ஐ சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்குச் செலுத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான டி.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேசிய மலரான தாமரையை ஓர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி. அது நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துகிறது.

பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவைப் பரிசீலித்து, பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில், எந்தத் தகுதியும் இல்லையெனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரத்தை சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்குச் செலுத்தவும், மீதித் தொகையை மனுதாரர் பெற்றுக்கொள்ளவும் அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *