
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் போடுவதற்கு முன்பே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 20 ஓவர்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார்.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா மற்றும் ஹரீஷ் ராஃப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அமீர் கான் 2 விக்கெட் எடுக்க, ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் எடுத்துக் கொடுத்தார்.
பின்னர் எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கி அதிரடி காட்டினர். இதில் 13 ரன்களில் பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உஸ்மான் கான் 13 ரன்களிலும், ஃபகர் ஜமான் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடி வந்த ரிஸ்வானும் 31 ரன்களில் வெளியேறவே, ஷதாப் கான் 4, இஃப்திகார் அகமது 5, இமாத் வாசீம் 15 என்று வரிசையாகப் பாகிஸ்தான் வீரர்கள் நடையை கட்டினர். கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் ஒரு விக்கெட் உள்பட 11 ரன்கள் கொடுத்து அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியாகப் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தோல்வியின் மூலமாக இந்தியாவிற்கு எதிராக 7ஆவது தோல்வியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி புதிய சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்தபட்சமாக 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது.
120 vs பாகிஸ்தான் நியூயார்க், 2024 *
139 vs ஜிம்பாப்வே ஹராரே 2016
145 vs இங்கிலாந்து, நாக்பூர் 2017
147 vs வங்கதேசம், பெங்களூரு, 2016
டி20 உலகக் கோப்பையில் குறைவான் ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணிகள்:
120 இலங்கை vs நியூசிலாந்து சட்டோகிராம், 2014
120 இந்தியா vs பாகிஸ்தான், நியூயார்க் 2024 *
124 ஆப்கானிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், நாக்பூர் 2016
127 நியூசிலாந்து vs இந்தியா நாக்பூர் 2016
129 தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து லார்ட்ஸ் 2009
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான குறைவான் ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணிகள்:
119 by ஜிம்பாப்வே, ஹராரே 2021
120 by இந்தியா, நியூயார்க் 2024 *
128 by ஆஸ்திரேலியா, மெல்போர்ன் 2010
130 by இங்கிலாந்து, அபுதாபி 2012
131 by ஜிம்பாப்வே, பெர்த், 2022
பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அக்ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 2 வெற்றிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதோடு நெட்ரன் ரேட்டிலும் முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ஜஸ்ப்ரித் பும்ரா பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரிலும் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையடுத்து டி20 உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
