கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சியில் பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனத்தின் தகவல் தொடர்பு கோபுரம் திறக்கப்படாததை கண்டித்து 8 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர் . பொதுமக்கள் மாணவர்கள் விவசாயிகள் செல்போன் வசதிகளை பெற முடியாமல் கற்காலத்தில் வாழ்வதாக பொதுமக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சியில் பொன்னாத்தி, புத்துகுறிச்சி, முடவன்குளம், பெருங்கண்ணங்குளம், உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு மாணவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு bsnl நிறுவனம் 40 லட்சம் மதிப்பில் தகவல் தொடர்பு கோபுரத்தை அமைத்துள்ளது. ஆனால் முறையாக திறக்கப்படாமல் சரியாக அலைவரிசை கிடைக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தகவல் தொடர்பின்றி மிகவும் பாதிக்கப்பட்டனர்.
அதனால் அப்பகுதியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி அலுவலகம், தபால் நிலையம், வருவாய்த்துறைத் அலுவலகம் போன்றவற்றில் மாணவர்களும் பொது மக்களும் அரசு திட்டங்களை பயன்படுத்த முடியாமல் சரியான நெட்வொர்க் இல்லாததால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பலமுறை பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று பிஎஸ்என்எல் உயர் கோபுரம் முன்பாக பந்தல் அமைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
