தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், மத்திய இணையமைச்சர் எல். முருகன் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, அன்புமணி பாமக உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு எப்படியாவது விஜயை கொண்டு வந்து விட வேண்டுமென பாஜக கடுமையாக முயன்றது.
அவரின் தவெக கட்சிக்கு 45 சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவி வரை வழங்கவும் என்.டி.ஏ கூட்டணியில் பேரம் பேசப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், நடிகர் விஜய் விடாப்படியாக என்.டி.ஏ கூட்டணியில் சேர மறுத்து விட்டார். அதோடு, விஜய் கட்சியுடனும் வேறு எந்த கட்சியும் சேரவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று விஜய் முழங்கிய போதும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விஜய் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை.
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று முழங்கிய திருமாவளவனும் 8 சீட்டுகளை வாங்கிக் கொண்டு திமுகவுடனே ஒட்டிக் கொண்டார். இதனால் , விஜய் கட்சியாலும் தனியாக நின்று வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், முதல்வர் கனவுடனே விஜய் அலைந்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது, விஜய் தங்கள் கூட்டணியில் இல்லாத காரணத்தினால் தங்கள் கூட்டணி வெற்றி பெற்று விட்டால், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று விட வேண்டுமென்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, மத்திய இணையமைச்சராகவுள்ள எல். முருகனை அவினாசி தனித் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
என்.டி.ஏ கூட்டணியிலுள்ள பாரதிய ஜனதா சாரபாக போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் பா.ஜ.க தரப்பில் மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது.
இவர், தேர்தலில் வெற்றி பெற்றதே கிடையாது. கடந்த 2011ம் ஆண்டு ராசிபுரம் தொகுதி, 2021ம் ஆண்டு தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். 2024ம் ஆண்டு நீலகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு திமுகவின் ஆ.ராசாசிடத்தில் தோல்வி கண்டார்.
தோல்வியின் நாயகனாக இருந்தாலும், பாரதிய ஜனதாவின் தலைமை இவர் மீது அக்கறை கட்டுவதால், மத்திய இணையமைச்சராக்கப்பட்டார். பாரதிய ஜனதாவில் பட்டியலின முகமாக பார்க்கப்பட்டாலும் திருமாவளவன் போலலோ அல்லது மற்ற பட்டியலினத் தலைவர்கள் போலவே கவர்ச்சி இல்லாத தலைவராகவே எல். முருகன் வலம் வருகிறார்.
இதனால்தான், தேர்தல் களத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்று சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், அவிநாசி தனி தொகுதியில் எல். முருகன் மீண்டும் களமிறங்குகிறார். அதிமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டால், துணை முதல்வர் பதவிக்கு எல். முருகனை கொண்டு வரும் முடிவில் பா.ஜ.க தலைமை உள்ளதாம்.
இதனால்தான் மத்திய இணையமைச்சராக உள்ள அவரை , மாநில தேர்தலுக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இது அமித்ஷா எடுத்த முடிவு என்றும் சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சியினர் நல்லமுறையில், ஒத்துழைப்பு அளித்தால், இந்த முறை அவினாசி தொகுதியில் எல். முருகன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
கூட்டணி கட்சிகள் உள்ளடி வேலை பார்த்தால், எல். முருகனுக்கு மீண்டும் தோல்வி கிடைக்கலாம். கடந்த 2021ம் ஆண்டு இந்த தொகுதியில் முன்னாள் சபாநாயகரான தனபால் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, அதிமுகவில் இருந்தே தனபால் ஓரங்கட்டப்பட்டு விட்டார்.
தனது தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து மிகுந்த மனவேதனையுடன் பேசிய தனபால், கட்சியில் இது தொடர்பாகத் தன்னிடம் யாருமே கலந்து ஆலோசிக்கவில்லை . அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பார்க்கவில்லை .
நான் முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களே நேரில் வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்தார். ஆனால், இப்போதுள்ள தலைமை என்னைக் கண்டுகொள்ளவில்லை. எனது மகனுக்குப் போட்டியிட வாய்ப்புக் கேட்டபோதும் அதற்கு எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை,” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
அதிமுகவின் கோட்டை எனச் சொல்லப்படும் கொங்கு மண்டலத்திலேயே, ஒரு மூத்த தலைவரின் தொகுதியைத் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கியிருப்பது அதிமுக கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி தேர்தல் முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.