ஜெயலலிதாவிடம் பொய் கூறி சீட் வாங்கினால் என்ன நடக்கும் தெரியுமா.?

Advertisements

நான் பூங்குன்றன் பேசுகிறேன் என்று  செல்போனில் ஒரு அழைப்பு வந்த விட்டால் போதும்,  ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒருகணம் பதறி போய்விடுவார்கள். அப்படி, கார்டனில் சர்வ வல்லமை பொருந்தியவராக வலம் வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராகவும் அவருடைய உதவியாளராகவும் அறியப்பட்ட பூங்குன்றன்.

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் . இதனால்,  சசிகலா தரப்பும் இவரை அரவணைத்துக்கொண்டது. பூங்குன்றனின் தந்தை புலவர்  சங்கரலிங்கம்தான் ஜெயலலிதாவுக்கு ஆரம்ப காலத்தில், அறிக்கைகள் எழுதித்தரும் பணியினை செய்து கொண்டிருந்தார்.

அதன்பிறகு,  நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் சங்கரலிங்கம் கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவுக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்கிற  நிலை வந்தபோது, ஊரில் இருந்த தனது மகன் பூங்குன்றனை ஜெயலலிதாவிடம் சேர்த்து விட்டார் சங்கரலிங்கம். ஆரம்பத்தில், கார்டனுக்கு வரும் ஃபேக்ஸ் மற்றும் கடிதங்களை சரிபார்க்கும் பணியில் இருந்த பூங்குன்றன்,கொஞ்ச காலத்திலேயே ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக மாறினார்.

அதன்பிறகு ,போயஸ் கார்டனில் சசிகலாவுக்கு அடுத்து சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக பூங்குன்றன் மாறினார்.
பூங்குன்றன் மனது வைத்தால், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் பதவி முதல், ஒன்றிய செயலாளர் பதவி வரை எது வேண்டுமானாலும் எளிதாகக் கிடைத்துவிடும் என்ற நிலையும் இருந்தது.  போயஸ்கார்டனில்,  பூங்குன்றனுக்கு என தனி அறையும் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் பூங்குன்றன் தொடர்ச்சியாக கார்டனுக்கு சென்று வந்தார். சசிகலாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த சில மாதங்கள் வரை கட்சி விவகாரங்களை தொடர்ந்து பூங்குன்றனே கண்காணித்து வந்தார். பின்னர்தான் , முற்றிலும் ஒதுங்கி விட்டார்.

இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலுக்காக  அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.  தற்போதையை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான முறையில் செயல்படுவதாகவே பூங்குன்றன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே,   சீட் ஒதுக்குவதில் ஜெயலலிதா எத்தகைய யூகங்களை கையாள்வார் என்று பூங்குன்றன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அரசியல் என்பது கணக்குகளால் ஆனது என்பார்கள். ஆனால், ஜெயலலிதாவின் அரசியல் கருணையால் நிறைந்தது. தேர்தல் நேரங்களில் அவரோடு நான் பயணித்த அந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால பக்கங்கள். இன்றும் அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்க்கையில், ஒரு தலைவியாக அல்லாமல், தொண்டர்களின் துயர் துடைக்கும் தாயாகவே அவர் என் மனக்கண்ணில் நிற்கிறார்.

ஜெயலலிதா தங்கம் போன்றவர்.. அவரிடம் வேடம் போட முடியாது, உண்மையான விசுவாசத்தை மட்டுமே அவர் அளவுகோலாக வைத்திருப்பார்.  ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யும் போது, அவரிடம் எவ்வளவு பணபலம் இருக்கிறது என்பதை அவர் ஒருபோதும் அளவுகோலாகக் பார்க்கமாட்டார். “இவர் நல்லவரா? விசுவாசமானவரா? கட்சிக்காக உழைத்தவரா?” – இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலில் தான் ஜெயலலிதாவின் அங்கீகாரம் இருக்கும்.

நேர்காணலின் போது, வேட்பாளர்கள் தங்களால் இயன்ற செலவுத் தொகையைச் சொல்லும் போது, ஜெயலலிதா அதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார். ஏனெனில், பணத்தை விடவும் ஒரு தொண்டனின் அர்ப்பணிப்பு பெரியது என்பதை அவர் நன்கு அறிந்தவர். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, தலைமை கழகத்துக்கு பல புகார்கள் வரும். “ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி சீட் வாங்கிவிட்டார், அவரிடம் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை” என்று அங்கு வேலை செய்யும் நிர்வாகிகள் என்னைத் தொடர்பு கொண்டு ஆதங்கப்படுவார்கள்.

ஆனால், ஜெயலலிதா எதையும் நிதானமாகவே கையாளுவார். யார் என்ன சொன்னாலும், தான் நம்பிய ஒரு தொண்டன் களத்தில் தவிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார். பொருளாதார வசதி இல்லாத வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களை வெற்றி பெறச் செய்வதில் அவர் காட்டும் அக்கறை ஒரு தாயின் பரிவுக்கு இணையானது.

பணமில்லை என்றாலும், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் வேட்பாளர்கள் நின்ற அந்தத் தருணங்களை நினைக்கும் போது இன்றும் நெஞ்சம் நெகிழ்கிறது. தன் பலத்தையும் பணத்தையும் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளருக்காக செலவு செய்த எத்தனையோ கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள். அப்படி,  கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அந்த உத்தமர்களை நான் இப்போதும் போற்றி வணங்குகின்றேன்.

அரசியல் சதுரங்கத்தில் எத்தனையோ சூழ்ச்சிகள் இருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவின் நிழலில் நான் வாழ்ந்த அந்த பயணம் ஒரு போராட்டம் போன்றது. ஒரு மாபெரும் ஆளுமையின் நிழலில், அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்து பணியாற்றியதை ஒரு கடமையாகவோ அல்லது வெறும் வேலையாகவோ நான் பார்க்கவில்லை; அதை என் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். அழியாத சுவடுகளாக என் இதயத்தில் நிலைத்திருக்கும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *