
புதுடில்லி: அமளியில் ஈடுபட்டதாக லோக்சபாவில் கனிமொழி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உட்பட 14 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் திரிணமுல் காங்., எம்.பி., டெரிக் ஓ பிரையன் என மொத்தம் 15 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, பார்லி.,யில் உள்ளே அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பார்லிமென்ட் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். பார்லி.,யில் பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாகவும், அது குறித்து விவாதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதேபோல், லோக்சபாவில் பார்லி.,யில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்தக்கோரி அமளியில் ஈடுபட்ட ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன், ஹிபி ஈடன், டீன் குரியகோஸ், கனிமொழி, மாணிக்கம் தாகூர், பி.ஆர்.நடராஜன், முகமது ஜாவித், சு.வெங்கடேசன், கே.சுப்பிரமணியம், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகிய 14 லோக்சபா எம்.பி.,க்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

