முதல் படமே சூப்பர் ஹிட் – “லப்பர் பந்து நடிகை சஞ்சனா”!

Advertisements

ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் அறிமுகமாகிக்கொண்டேதான் இருப்பார்கள். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 2கே கிட்ஸ் நிறையப்பேர் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர்.

முன்புபோல் பயிற்சி பட்டறை, ஆடிஷன் என்று திரையில் கால் பதிக்க இப்போது சிரமப்பட தேவையில்லை. யார் வேண்டுமானாலும் தங்களது திறமைகளைச் சமூக ஊடகங்களில் பதிவிடுவதன்மூலம் சுலபமாக வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.

அந்த வரிசையில் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்ததன்மூலம் இப்போது நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் சஞ்சனா கே. என்று அறியப்படுகிற சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் வெளியான மிகவும் குறைந்த பட்ஜெட் படமான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதற்கிடையே யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் சஞ்சனாவிற்கு விருப்பம் என்னவோ படத்தை இயக்குவதுதானாம்.

இப்படிச் சொல்லும் அவர் அடுத்து வளர்ந்துவரும் நடிகர் கவினை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகச் செய்திகள் வலம்வருகின்றன.

சஞ்சனா கே என்கிற சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

22 வயதாகும் சஞ்சனாவுக்கு சொந்த ஊர் ஊட்டி. ஆனால் இவர் பிறந்தது அங்கு என்றாலும் அப்பா ஒரு பத்திரிகையாளர் என்பதால் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் குடும்பமாக வசித்துவந்துள்ளனர்.

அதனாலேயே மதுரை, திருச்சி, ஈரோடு எனப் பல இடங்களில் பள்ளிப்படிப்பை தொடர்ந்திருக்கிறார். இவருக்குச் சினிமா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதாலேயே ஓரளவு நன்றாகப் படித்தாலும் extra curricular activities-இல் அதிக கவனம் செலுத்திவந்துள்ளார்.

குறிப்பாக, சிறுவயதிலிருந்தே, டான்ஸ், மியூசிக், ஸ்போர்ட்ஸ் என இருந்ததால் கல்லூரிக்குச் சென்றபிறகு தனது கவனம் முழுவதையும் தன்னுடைய கெரியருக்கு ஏற்றவாறு திசைதிருப்பினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கல்லூரி காலத்தில் பெரும்பான்மை கொரோனா காலமாக இருந்ததால் இவரால் கல்லூரி நாட்களை அனுபவிக்கமுடியவில்லை என்று வருத்தப்பட்டாலும் விஷுவல் கம்ப்யூனிகேஷன் படித்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலிருந்தபடியே சமூக ஊடகங்களில் புதுபுது கன்டன்ட்களை போட ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக, நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பீச் பகுதிகளுக்குக் கேமிராவுடன் சென்று அங்குத் தங்களுடைய கன்டன்ட்களை படம்பிடிப்பது, போட்டோஷூட் செய்வது போன்றவற்றை பொழுதுபோக்காக வைத்திருந்திருக்கிறார். அதன்மூலம் யூடியூப் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு சஞ்சனாவுக்கு கிடைத்தது.

கொரோனா காலத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘Mom and Me’ என்ற தொடர் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. ஆனால் அதற்கு முன்பே ‘வதந்தி’ என்ற வெப் தொடரில் நடிக்கக் கமிட்டாகியிருந்தாலும், கொரோனா பொதுமுடக்கத்தால் அதன் ஷூட்டிங் தள்ளிப்போனது.

ஒரு வழியாகக் கொரோனாவுக்கு பிறகு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தத் தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, பொதுமுடக்கத்தால் தியேட்டர்கள் அனைத்தும் மூடியிருந்த சமயத்தில் மக்களுக்குப் பொழுதுபோக்காக இருந்த ஓடிடி தளத்தை நம்பியே பலர் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் வெப் தொடர்களை எழுதி, இயக்க ஆரம்பித்தனர்.

மேலும் பழைய படங்களையும் ஓடிடியில் ரிரீலிஸ் செய்தனர். அதன்மூலம் தியேட்டர்களில் ஓடாத சில படங்கள்கூட ஓடிடியில் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தன.

அந்தச் சமயத்தில் பல மொழிகளில் பல தொடர்கள் வெளியாகி இருந்தாலும் எஸ்.ஜே சூர்யா, நாசர், லைலா போன்ற பெரிய நட்சத்திரங்கள் இடம்பெற்ற ‘வதந்தி’ தொடரில் வெலோனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார் சஞ்சனா.

சமூக ஊடகங்களில் பிரபலமான முகம், நடித்த முதல் யூடியூப் தொடருக்கே நல்ல வரவேற்பு, முதல் ஓடிடி வெப் தொடரே மாபெரும் ஹிட் எனச் சஞ்சனா கால்வைத்த இடங்களிலெல்லாம் பேரும் புகழும் பெற்றார்.

ஒரே படத்தில் கிடைத்த ஃபேமஸ்!

இப்படி அனைவருக்கும், குறிப்பாக, 2கே கிட்ஸ்களுக்கு பரிச்சயமான முகமாகச் சஞ்சனா மாறியிருந்தாலும், கொரோனா காலத்தில் மனதளவில் சில அழுத்தங்களைச் சந்தித்ததாகக் கூறியிருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே எங்குச் சென்றாலும் அங்குத் தனக்கென நண்பர்களை உருவாக்கிக்கொண்டு ஜாலியாக இருப்பதையே விரும்பும் சஞ்சனாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை.

ஆனால், நடிப்புத்துறையில் இருக்கவேண்டுமானால், சரும பராமரிப்பு அவசியம், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் பின்னர்தான் தெரியவந்திருக்கிறது.

ஜிம் போவது, ஸ்கின் கேர் செய்வது என வாழ்க்கைமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தபோது சஞ்சனா மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறுகிறார்.

ஆனால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டபிறகு இப்போது அதுவே தனது வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்கிறார்.

அதன்பிறகு சஞ்சனாவுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து. ‘லப்பர் பந்து’ படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் சஞ்சனா.

கடந்த ஆண்டு இறுதியில் ‘வேட்டையன்’, ‘மெய்யழகன்’ போன்ற பெரிய பட்ஜெட் மற்றும் சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ரூ.50 கோடிக்கும்மேல் வசூல்சாதனையும் படைத்தது.

அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, சஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

அழகான கிராமத்து காதலை மக்கள் மத்தியில் கொண்டுசென்ற இப்படம் வயதானவர்கள்முதல் இந்தத் தலைமுறையினர் வரைக்கும் பலருக்கும் பிடித்தபடமாக மாறியது.

முதல் படமே மிகப்பெரிய ஹிட்டடித்ததால் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர்ஸ்டாராகச் சஞ்சனா வருவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருடைய ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்விதமாக ஒரு தகவல் உலாவருகின்றது.

நடிகை டூ இயக்குநர் – சஞ்சுவின் நெக்ஸ்ட் மூவ்!

சஞ்சனாவுக்கு முன்பே பவி டீச்சர் என்ற ரோலின்மூலம் பிரபலமான பிரிகிடா, இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்தான்.

அதேபோலவே சஞ்சனாவும் முதலில் யூடியூப், வெப் சீரிஸ் என நடித்துவந்தாலும், தனக்கு மிகவும் பிடித்த இயக்கத்தில் இறங்கவேண்டுமென, நடித்துக்கொண்டே‘தக் லைஃப்’ படத்திலும் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘லப்பர் பந்து’ படத்தின்மூலம் கிடைத்த புகழால் அடுத்து ஒரு சிறப்பான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று நினைத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும்விதமாக அடுத்து படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் சஞ்சனா.

தான் 6வது, 7வது படித்த காலத்திலிருந்தே சினிமா இயக்க வேண்டும் என்ற எண்ணம் சஞ்சனாவுக்குள் இருந்ததாம். இதுகுறித்து ஒரு நேர்காணலில் அவர் பகிர்கையில், “6வது, 7வது படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மிகவும் ஆழமாக இருந்தது.

எங்களுடைய குடும்பத்தில் யாருமே சினிமாத்துறையில் இல்லை என்பதால் ஆரம்பத்தில் எனக்கு இப்படியொரு ஆசை இருக்கிறது என்று வெளியே சொல்லவே தயங்கினேன்.

இதை வெளியே சொன்னால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களோ என்று நினைத்தேன். ஒருமுறை என் வீட்டிற்கு மாமா ஒருவர் வந்திருந்தபோது ‘பெரியவளாகி என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்டார்.

அதற்கு நான் ஃபேஷன் டிசைனர் ஆகப்போகிறேன் என்று சொல்லிவிட்டேன். உடனே என் அம்மா என்னை ஒரு மாதிரி பார்த்தார். பின்பு தனியாக வந்து ஏன் மாற்றிச் சொன்னாய்? என்று கேட்டார்.

நான் சொல்லி, அவர்கள் ஏதாவது கேட்டால் எனக்கு ஏமாற்றமாகிவிடும் என்று சொன்னேன். அதற்கு என் அம்மா, நம்பிக்கையுடன் வெளியே சொல். அதுதான் முதல் படியென நினைக்கிறேன் என்று சொன்னார்.

அன்றிலிருந்துதான் எனக்குள் தைரியம் வந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர் எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருப்பார்கள்” என்று சொல்லியிருந்தார்.

அதன்படி இயக்கத்துக்குத் தன்னை மெருகேற்றிவந்த சஞ்சனா, தற்போது நடிகர் கவினை வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாகவும், அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் நடிகையாக அறிமுகமாகி அதன்மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றபிறகே, ரேவதி, ரோகிணி போன்றோர் இயக்கத்தில் இறங்கியிருந்தாலும், ஒரு படம் நடித்து முடித்த கையோடு, அதிரடியாக இயக்கத்தில் இறங்கவிரும்பும் சஞ்சனா குறித்து வெளிவரும் தகவல்கள் சற்று அதிர்ச்சியளித்தாலும், தமிழ் சினிமாவுக்கு இந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் மற்றொரு இளம்பெண் இயக்குநர் கிடைத்துவிட்டாரெனப் பலரும் பாராட்டிவருகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *