![](https://gemlive.tv/wp-content/uploads/2024/03/banner.jpg)
காஃபி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இந்தச் சூடான பானத்தைக் குடிக்க சிறந்த நேரம் எது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காலை நேரம் காஃபி குடிக்க சிறந்த நேரமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.
European Heart Journal வெளியிடப்பட்ட சமீபத்திய இந்த ஆய்வு முடிவானது, காலை நேரத்தில் காஃபி குடிப்பவர்கள் இதய நோயால் இறக்கும் ஆபத்து குறைவு என்றும், நாள் முழுவதும் காஃபி குடிப்பவர்களை விட இவர்களுக்கு ஒட்டுமொத்த இறப்பு ஆபத்து குறைவு என்றும் கூறி வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள Tulane பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், காலையில் காஃபி குடிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவாகவும், இதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு சுமார் 31 சதவீதம் குறைவாகவும் இருப்பதாக ஆய்வு காட்டுவதாகக் கூறி இருக்கிறார்கள்.
காலையில் காஃபி குடிப்பது, பிற்பகல் குடிப்பதை விடக் குறைந்த இறப்பு விகிதங்களுடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
காஃபி குடிக்கும் நேர முறைகள் மற்றும் சுகாதார விளைவுகள்பற்றி வெளிப்படுத்தி இருக்கும் முதல் ஆய்வு இது. நீங்கள் காஃபி குடிக்கிறீர்களா அல்லது எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, நீங்கள் காபி குடிக்கும் நேரமும் முக்கியம் என்பதை எங்களின் இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன என்று ஆய்வில் தொடர்புடைய பேராசிரியர் டாக்டர் லுகுய் கூறி உள்ளார்.
இந்த ஆய்வில், 1999-ஆம் ஆண்டு மற்றும் 2018-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 40,725 பெரியவர்கள்குறித்த தரவை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ஆய்வில் பங்கேற்றவர்களிடம் குறைந்தது ஒரு நாளில் அவர்கள் என்னென்ன உணவு மற்றும் பானங்களை எடுத்துக் கொண்டார்கள், அதில் அவர்கள் காஃபி குடித்தார்களா, அப்படி குடித்திருந்தால் எவ்வளவு, எப்போது குடித்தார்கள் என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட்டன.