
அறுவடைத் திருநாளான பைசாகியையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அறுவடைத் திருநாளான பைசாகி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டிப் பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோலப் பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர்களின் போராட்ட உணர்வை எதிர்காலத் தலைமுறையினர் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நம் நாட்டின் வரலாற்றில்ல் ஓர் இருண்ட அத்தியாயம் என்றும், அவர்களின் தியாகம் இந்திய விடுதலைப் போரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் அமிர்தசரசின் ஜாலியன்வாலாபாக் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆங்கிலேய காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
