
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்ற வார்த்தைக்கு ஏற்ப தமிழ் மக்கள் எல்லோரும் சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு நாளில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், நம் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தை எதிரொலிக்கும் விழாக்களைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு விழாக்கள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மகிழ்ச்சியான புத்தாண்டு நாளையொட்டி அன்பான வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தாண்டு வளத்தையும் நலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என்றும், அனைவரும் நல்ல நலத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், புனிதமான சடங்குகளுடன் நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்கும்போது, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளும் அளிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
