
போரூர்:
காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடாக, காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் போன்ற பல்வேறு பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். இதனால் பூ விற்பனை கடைகளில் விற்பனை அதிகரிக்கும்.
காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஓசூர், பெங்களூரு, ஊட்டிப் போன்ற இடங்களிலிருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை போன்ற பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன.
இதில் 20 எண்ணிக்கை கொண்ட (ஒரு பஞ்ச்) சிவப்பு ரோஜா ரூ.450-க்கு, பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் ஒரு பஞ்ச் ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விற்பனை நடைபெறுகிறது.
