
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில், பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் என்றும், இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும் என்றும், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்து என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்ரீத் பண்டிகை என அழைக்கப்படும் ஈகத் திருநாளில் இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் தனது இனிய பெருநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில், உன்னத தியாகத்தை போற்றும் வகையில், பக்ரீத் பண்டியை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், உயரிய தியாகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.




