
கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
கொலம்பியாவில் நேற்று 7 புள்ளி 4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் காளி மற்றும் பெரேரா நகரங்களில் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்க கொலம்பிய ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கொலம்பியா அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரீல்லா பேசியபோது, நிலநடுக்கத்தால் ஆயிரத்து 577 குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 60க்கும் மேற்பட்ட கட்டடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 18 மருத்துவ மையங்கள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகக் கூறினார். கொலம்பியாவில் உள்ள 7 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தின் பேரழிவைக் கருத்தில் கொண்டு கொலம்பிய அரசு தேசியப் பேரிடர் அவசரநிலையைப் பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கொலம்பியாவுக்கு 130 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



