
ஜார்க்கண்டில் மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ராகுல்காந்தி பதிலளிக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் முறைகேடுகளைக் கண்டித்துத் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள், கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர் ஆகியோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழலைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தியது குறித்து, அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராகுல்காந்தி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார்.



