தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்திற்காக, அப்பாவி பொதுமக்கள் உயிரை தி.மு.க., பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது என பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்ட பதிவு: சென்னை, அண்ணா நகரில், நேற்று காலை, மது போதையில் வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர்; பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அதே நேரம், தமிழகத்தில் இரண்டு நாட்களில் மட்டும் நடந்த மது விற்பனை 467.69 கோடி ரூபாய் என, ‘டாஸ்மாக்’ நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.இதனால், ‘மதுவிலக்கு துறையா அல்லது மது விற்பனை துறையா’ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு, மது விற்பனையில் சாதனை படைத்து வருகிறது தி.மு.க., அரசு.
இந்த அரசு, மதுவால் ஏற்படும் உடல்நல குறைவு, மரணங்கள் இதுபோன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவி மக்களின் மரணங்கள் என, எதைப்பற்றியும் கவலையின்றி இலக்கு நிர்ணயித்து மது விற்பனை நடத்தி வருகிறது.
தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் மது விற்பனை இத்தனை கோடி என்றால், இந்த ஆலைகள் நடத்தும் தி.மு.க.,வினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்திற்காக, அப்பாவி பொதுமக்கள் உயிரை தி.மு.க., பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.