
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி இன்று காலை காலமானார். தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகாதேவி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகா தேவி பாலு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் திருமதி. ரேணுகா தேவி பாலு அவர்கள். அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் திரு. டி.ஆர்.பாலு, தம்பி திரு. டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.


