ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் – மு.க.ஸ்டாலின்!

Advertisements

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பது,

திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *