
இசையமைப்பாளர் இளையராஜா தனது மகள் பவதாரிணி நினைவாகச் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.
தனது தனித்துவமான குரலால் எண்ணற்ற இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பாடகி பவதாரிணி.
இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவிய இளையராஜா, தனது இசையில் பவதாரணி பாடிய “காற்றில் வரும் கீதமே” என்ற பாடலையும் பாடினார்.
பவதாரிணி நினைவாக அவரது பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார்.
இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்துகொண்டார்.
கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் திதியையொட்டி நடந்த இந்நிகழ்ச்சியில், பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்தது.
