டசல்டார்ப் நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேச்சு..!

Advertisements

ஐரோப்பியத் தொழில்துறையின் முதுகெலும்பாக ஜெர்மனி இருப்பதைப் போல், இந்தியத் தொழில்துறையின் இதயத் துடிப்பாகத் தமிழ்நாடு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் டசல்டார்ப் நகரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐரோப்பாவின் தொழில்வளமிக்க நாடாக ஜெர்மனி விளங்குவதைப் போல், இந்தியாவில் தொழில்வளமிக்க மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாகத் தெரிவித்தார்.

BMW, டைம்ளர் மெர்சிடிஸ் பென்ஸ், சினெய்டர், சீமன்ஸ், பாஸ் உள்ளிட்ட அறுபதுக்கு மேற்பட்ட ஜெர்மன் நிறுவனங்களில் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவிச் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். மேட் இன் ஜெர்மனி என்பது உலக அளவில் தரக் குறியீடாக உள்ளதுபோல் மேட் இன் தமிழ்நாடு என்பதும் உலகத் தரக் குறியீடாக உருவாகி வருவதாகக் கூறினார்.

தான் இங்கு முதலீட்டை ஈர்க்க மட்டும் வரவில்லை என்றும், ஜெர்மனிக்கும் தமிழ்நாட்டுக்கும் இணைப்புப் பாலம் ஏற்படுத்த வந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். ஜெர்மனியின் நுட்பம், தமிழ்நாட்டின் ஆற்றல் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே ஓர் வலுவான வணிக இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் மொத்தம் 23 புரிந்துணர்வு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டதாகவும், 3800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒன்பதாயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *